வெள்ளி, 3 ஜூலை, 2020

ஆழி சுழ் ஆண் - பகுதி-1

ஒரு சுபயோக சுபதினத்தின் காலை...

அடேய், காலைல மணி என்னவாகுது, இன்னும் தூங்கிட்டு இருக்க..

அவன் காலையில் தினமும் கை தொழ வேண்டிய அம்மா காட்டுக்கத்தலாய் கத்திக்கொண்டிருந்தாள்...

இப்போதுதான் லேசாக உறக்கம் கலைந்து கையை நீட்டி நெளிவெடுத்தான்.

நெளிவு எடுக்கும்போது 'அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாபா' என்று திருவாய் மலர்ந்தான், அதைக்கேட்ட அவ்ன் அம்மா அடுக்களையிலிருந்து எட்டிப் பார்க்கும்போது மணி எட்டரை, அப்போது அவனுக்கு தெரியாது அந்த எட்டரை அவனுக்கு ஏழரை என்று..

"வேளாவேளைக்கு சமைச்சுப் போட்டு, துணிய துவைச்சு, காலேஜ்க்கு தினமும் சாப்பாடு கட்டி குடுக்கிறது நான், ஆனா நெளிவு சத்தம் அப்பாவாம்ல!

ஊர்ல உலகத்துல புள்ளைங்க எப்பிடி இருக்குதுங்க, புள்ளையும் புள்ளய புடிச்ச லட்ச்சணமும்"..

 இப்படியாக 'அவனுடைய' அந்த அதிகாலைபொழுது துவங்கியது.

நெளிவு சத்தம் 'அப்பா'வாக இருக்கலாம், ஆனால் எழுந்தது முதல் கல்லூரிக்கு போக வீட்டை விட்டு இறங்கும் வரை அவன் வாயில் 'அம்மா' சத்தம் ஓயாது.

"அம்மா, காபி...!

அம்மா, பிரஷ்..!

அம்மா, துண்டு..!

அம்மா, என் சட்டை..!

அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாமாமா என் வாய்..!" என்று காபியின் சூடு தாங்காமல் அலறினான்.

முதல்ல காபிய குடிச்சுட்டு அப்புறமா மத்தத கேளுடா என்று ஒரு வெடி சிரிப்புடன் அவனை கடந்து சென்றாள், "ஏண்டி, என் பையில இருந்த 50ரூபாயை காணோம் நீ பார்த்தியா என்ற கணவனை நோக்கி.

ம்ம், நேத்து இராத்திரி நாளைக்கு என்ன சாப்பாடு வேணுன்னு சொன்னீங்க!

தக்காளி சாதம்!

அதான், 50ரூபாய் செலவாயிடுச்சு.. என்று ஒரு முட்டுச்சந்தில் வைத்து கணவனை மடக்கிவிட்டு, மகனின் அடுத்த 'அம்ம்ம்மா'விற்கு ஆயத்தமானாள்.

50ரூபாயை இழந்த சோகத்துடன் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த கணவனை நோக்கி வந்தவள், "ஏங்க, தெருவுக்கு காவேரித் தண்ணி பைப் போட சொல்லி சொல்லிட்டு வந்தீங்களா ஊராட்சி டேங்காரர் வந்து நிற்கிறார்" என்றாள்.

"ஆமா" என்றவனிடம், "கூடவே நமக்கும் தனியா பைப் போட சொல்லிருக்கலாம்ல" என்றாள்.

"அதுக்கு கொஞ்சம் காசு கையில வெச்சுகிட்டு சொல்லுவோம்டீ" என்றதும், "அதுக்குள்ள தண்ணி பிடிக்க இந்த மாடியில இறங்கி, ஏறி என் கால் போய்டும்" என்ற சொற்சொடரின் சொரசொரப்பை கவனியாததுபோல் மாடியை விட்டு கீழிறங்கியிருந்தான்.

அதிக நெருக்கமில்லாத அந்த தெருவின், நடுபகுதியில் இருந்த வன இலாகா அலுவலகத்தின் மாடியில் இருந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் வீடு இவர்களது. வரவேற்பரை, அடுக்களை, பூசையறை என்று அளந்து கட்டப்பட்ட வீடு.

கீழிறங்கி வந்தவன், "அண்ணே பைப்ப பார்த்து கொஞ்சம் மெயின்ல போட்டுவிடுங்க தெரு பைப்தானேன்னு அசால்ட்டா போட்டு ஒரு குடம் நிறைய ஒன்னரை மணி நேரம் ஆவுறமாதிரி வெச்சுடாதீங்க"

"சரிண்ணே! நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைபடாம போய்ட்டு வாங்க" என்று தலையை சொறிந்த டேங்க்காரனின் கையில் 500ரூபாய் நோட்டு ரெண்டை எடுத்து சொருகினான்.

                                               - தொடரும்

வியாழன், 2 ஜூலை, 2020

ஆழி சுழ் ஆண் - முன்னுரை

பெண் என்பவள், மகளாகி, மனைவியாகி, தாயாகி, வயதாகி, மாமியாராகி, ஆண் குலத்திற்காக தியாகியாகி என இத்தனை 'ஆகி'களை வாய்க்கப்பட்டவள், அதானாலேயே வதைக்கப்பட்டவள்........
(இதில் இப்போதும் மாற்றுக் கருத்து இல்லை)

ஆண் என்பவன் வெறும் ஆண். ஆமாம் 'ஆண்' வெறும் எண்சாண்.

என பெண்னின் சிறப்பை பற்றி மட்டுமே பேசித்திரிந்த ஆணாகிய ஒரு பெண்ணியவாதி

திடீரென,

மகனாகி, கணவனாகி, தந்தையாகி, வயதாகி, மாமனாருமாகி, மொத்த குடும்பத்திற்கே(ஆழி) தியாகியாகி என சில 'ஆகி'களை வரிசைபடுத்த எத்தனிப்பதே இக்கதையின் நோக்கம். ஆகவே பெண்ணியவாதிகள் அவன் மென்னியை பிடித்து, பின்னங்கால் பிடரியில் அடித்து ஓட வைக்க முற்பட வேண்டாம்.

பின்குறிப்பு:- இது யார் மனதையும் புண்படுத்துவதற்க்கு அல்ல. கதையுடன் தொடர்பிருந்தால் ஒரு மென் சிரிப்புக்கு உட்படுத்துவதற்க்கே






ஆழி சுழ் ஆண் - பகுதி-1

ஒரு சுபயோக சுபதினத்தின் காலை... அடேய், காலைல மணி என்னவாகுது, இன்னும் தூங்கிட்டு இருக்க.. அவன் காலையில் தினமும் கை தொழ வேண்டிய அம்மா காட...